ட்ரெண்டிங்

தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே ஒரே குறிக்கோள்!- டிடிவி தினகரன் பேட்டி!


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம், சேலம் மாவட்டம், வீரபாண்டியில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு இந்து முன்னணி சார்பில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து கட்சியினரும் கலந்து கொண்ட கூட்டத்தில் விமர்சனங்களைத் தவிர்த்து இருக்கலாம். அண்ணா மற்றும் பெரியார் இருவரும் திராவிட இயக்கங்களின் வழிகாட்டியாக உள்ளனர். அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது கண்டனத்துக்குரியது. இது வருத்தம் அளிக்கும் நிகழ்வாகும். அப்போது மேடையில் இருந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், அவை நாகரீகம் கருதி அமைதி காத்திருக்கலாம். நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற மாநாட்டிற்கு எல்லோரையும் அழைத்து விட்டு தங்களுடைய விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம்.

 
வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக மோடி மீண்டும் வந்தால்தான் நாட்டிற்கு பாதுகாப்பு என்பதை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று பிரசாரம் செய்தோம். தற்போது மீண்டும் பொது நோக்கத்திற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் அதைப்பற்றி அவசரப்படத் தேவையில்லை.

 தமிழகத்தில் தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பெரும்பான்மையானோர் உள்ள இந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகின்றனர். இந்துக்களுக்கு எதிராக பேசுவதுதான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்ற செயலை கைவிட வேண்டும். அண்மையில் திருமாவளவன் கூட திருப்பரங்குன்றத்தில் விபூதியை வைத்து விட்டு பின்னர் அழித்தது தேவையற்றது. அதற்கு அவர் அங்கு போகாமலே தவிர்த்து இருக்கலாம்

 சுதந்திரத்திற்கு தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிக மோசமான ஆட்சியாக தற்போது தி.மு.க. ஆட்சி உள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் தங்களுடைய கோரிக்கைகளுக்காக வீதிக்கு வந்து போராடும் நிலையிலேயே தி.மு.க. ஆட்சி உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்காத இடமே இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பலம், பண பலம், ஆட்சியில் இருக்கும் பலம் என பலத்துடன் போட்டியிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை முறியடித்து தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உருவாகும். மாநிலத்தில் சுயாட்சி என்பதற்கும் கூட்டணி ஆட்சி என்பதற்கும் தொடர்பு இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வாய்ப்பில்லை. ஒரு சிலரின் சுயநலத்தால் இதுபோன்ற நிலை உள்ளது. ஆனால் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒரே அணியில் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.