ட்ரெண்டிங்

உதவித்தொகைத் திட்டம் திருநங்கைகளுக்கும் விரிவாக்கம்! 


புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தொவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நல்வாழ்விற்கென நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்வி கற்பது இன்றியமையாததாகும்.

திருநங்கைகள் பாலின மாற்றத்தினால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் அவர்களும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வாதரத்தினை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பலர் கல்வியினை இடைநிற்றல் செய்ய நேர்கிறது. திருநங்கைகள் கல்வி உட்பட அனைத்து முயற்சிகளிலும் பாகுபாடு மற்றும் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இத்தடைகளை தாண்டி கல்வி பயில முன் வருகின்றனர். அவ்வாறு முன் வரும் திருநங்கைகளின் கல்வி கனவினை நிறைவேற்றுவதற்காக சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொறுப்பினை உணர்ந்து அவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது.

சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தற்போது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிப்பு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருநங்கைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் 6 முதல் 12- ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுவதுமாக தளர்வு செய்து தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.