ட்ரெண்டிங்

 சின்னகல்வராயன் மலையில் ஆட்சியர் கள ஆய்வு! 

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், 2- ம் நாளான இன்று (ஆகஸ்ட் 22) சேலம் மாவட்ட ஆட்சியர்  டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. கருமந்துறை, சின்னகல்வராயன் மலையில் முகாமிட்டு பொதுமக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமானது. நேற்றைய தினம் காலை முதல், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் அலுவலர்கள் குடிநீர் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு மருத்துவமனை, நூலகங்கள், அங்கன்வாடி மையங்கள், தெருவிளக்குகளின் செயல்பாடுகள், மற்றும் அரசு மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் என இரவு வரை ஆய்வு செய்து, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திலேயே தங்கி இன்றைய தினம் அதிகாலை முதல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை சின்னகல்வராயன்மலை வடக்கு நாடு கிராமத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், குடிநீரில் முறையான அளவுகளில் குளோரினேற்றம் செய்து வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கருமந்துறை சின்னகல்வராயன்மலை வடக்கு நாடு கிராமப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் காலை முதல் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அவர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. 

கருமந்துறை சின்னகல்வராயன்மலை வடக்கு நாடு கிராமப்பகுதியில் ஆவின் மூலம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுவது குறித்தும், விவசாயிகளுக்கு முறையாக பால்கொள்முதலுக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 21, 22 ஆகிய 2 நாட்கள் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் கள ஆய்வு குறித்த அறிக்கையினை இன்றைய தினம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து உரிய தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் ஜெயகுமார், அனைத்து அரசுத் துறை முதன்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.