சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சேலம் உருக்காலையில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கனரக தொழில்துறை மற்றும் எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி, ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தில் அனைத்து குடும்பத்தினரையும் ஊக்கப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். யோகா தின நிகழ்வுகளில் தானும் பங்கேற்று பிரதமர் மோடி உலகத்தையே ஊக்கப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தின் ஆரோக்கிய வாழ்விற்கு யோகா மிக முக்கியமானதாகும். இந்து கலாச்சாரமான யோகாவை ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.
சேலம் உருக்காலையை தொழில் ரீதியாகவும் சந்தைப்படுத்தும் வகையிலும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2003-2004 ஆம் ஆண்டுகளில் சேலம் உருக்காலை லாபகரமாக இயங்கியது. தற்போது சேலம் உருக்காலை லாபம் குறைந்துள்ளது. சேலம் உருக்காலையை மீண்டும் மேம்படுத்தி லாபகரமாக செயல்படுத்துவது முதல் நோக்கம். இதற்காக பல்வேறு புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டம் முதற்கட்ட ஆலோசனையில் உள்ளது. இதுகுறித்து இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் முறையான தகவல் வெளியாகும்.
எங்களுடைய அரசியல் மிகச்சிறியது. பா.ஜ.க. பிரிவினை ஏற்படுத்தவில்லை; நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இதன் காரணமாக சில மாநில கட்சிகள் பா.ஜ.க. மீது விமர்சனங்களை வைக்கின்றன. தக் லைஃப் ஒரு திரைப்படம்; அதை பற்றி கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.


