ட்ரெண்டிங்

சேலம் இரும்பாலையில் யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் பங்கேற்பு! 

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மத்திய கனரக தொழில் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, 11-வது சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜூன் 20) சேலத்திற்கு வருகை தந்தார். 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலைக்கு வந்த மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமிக்கு இரும்பாலையின் நிர்வாக இயக்குநர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரும்பாலை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய மத்திய அமைச்சர், இன்று (ஜூன் 21) காலை நடைபெற்ற யோகா தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். 

பல்வேறு வகையான யோகாசனங்களை மத்திய அமைச்சர் பயிற்சி செய்ய, இரும்பாலை பணியாளர்கள், அதிகாரிகள் என 100- க்கும் மேற்பட்டோர் செய்து அசத்தினர். 

உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு யோகா கலை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே ஜூன் 21- ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.