ட்ரெண்டிங்

விடுதி மாணவர்களுக்கு தங்குவதற்கான தலையணை, மெத்தை, போர்வையை வழங்கிய அமைச்சர்! 

 

தமிழ்நாடு முதலமைச்சரால் ஜூன் 12- ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்ட மரவனேரி கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாவட்ட ஆச்சிரி டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (ஜூன் 16) நேரில் பார்வையிட்டார்.

பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் விடுதிகளில் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜூன் 12- ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாட்கோ மூலமாக மரவனேரியில் ரூபாய் 7.66 கோடி மதிப்பீட்டில் 180 ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதியினைத் திறந்து வைத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி மாணவர் விடுதி இன்றையதினம் நேரில் பார்வையிடப்பட்டது. மரவனேரியில் புதியதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் விடுதியானது தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 31 அறைகள் வீதம் ஒவ்வொரு அறையிலும் 6 மாணவர்கள் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஒவ்வொரு அறையிலும் குளியலறை மற்றும் கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விடுதியில் உள்விளையாட்டு அரங்கம், நூலகம், சமையலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இவ்விடுதியினை நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்ஜெயக்குமார், தாட்கோ செயற்பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.