சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மே 02) நடைபெற்றது.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளன்று மாவட்ட ஆட்சியரக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயன்பெறும் வகையில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம். மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இ-சேவை மையக் கட்டணத்தைத் தவிர எவ்வித கூடுதல் கட்டணமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வாங்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அறை எண்: 11-ல் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினையோ, இ-சேவை மையங்களையோ அல்லது தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களையோ அணுகி பயன்பெறலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 80,697 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 14,506 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, 1,043 நபர்களுக்கு ரூபாய் 70.80 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,665 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 16.54 கோடி மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் என மொத்தம் ரூபாய் 153.58 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென இன்றையதினம் நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 47 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் நடத்தப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக பரிசீலினை செய்யப்பட்டு அதில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 6,840 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 16,200 மதிப்பிலான கைத்திறன்பேசிகளும் என மொத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 9,12,600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இத்தகைய அரசு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


