ஏற்காடு வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டெருமைகள் மலைக் கிராமங்களுக்கு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள 65 கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்காடு மலைப்பகுதியில் காட்டெருமைகள் மான், கீரி, நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. பேரிக்காய், சாத்துக்குடி, தேக்கு, சந்தனம் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் ஏற்காடு மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டை தடுப்பணைகளில் தண்ணீரின்றி வற்றிப்போனது.
இதனால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது. ஏற்காடு குண்டூர், ஜரீனா காடு, கரடியூர், நாகலூர், வாழவந்தி உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் காட்டெருமைகள் சர்வ சாதாரணமாக புகுந்து, மக்களை அச்சமடைய செய்து வருகிறது. மலை கிராம மக்கள் கூறுகையில், ஏற்காடு மலைப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை வனத்துறையினர் டிராக்டர் மூலம் நிரப்பினால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க முடியும். வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து கிராம மக்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



-SXgDfGgJfO.jpg)