சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 11) ரோடு ஷோ செல்லவுள்ள நிலையில், முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 11) காலை 10.00 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பெருந்துறை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து 50,000 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் என்ற பகுதியில் தி.மு.க.வின் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் ரோடு ஷோ சென்று நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார்.
ஜூன் 12- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரைத் திறந்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சுமார் 1 லட்சம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும் உரையாற்றுகிறார்.
புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சேலம் வருகையை முன்னிட்டு சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதேபோல், முன்னேற்பாடு பணிகளும், விழா மேடை அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


