சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48- வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியை இன்று (மே 23) மாலை 05.00 மணியளவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, அண்ணா பூங்காவில் உள்ள விதவிதமான வண்ண மலர்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வனவிலங்குகள், கார்ட்டூன்களை பார்த்தனர். நிகழ்ச்சியில், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்த அமைச்சர்கள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து, ஏற்காடு படகு இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால், ஏற்காடு மற்றும் ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


