ட்ரெண்டிங்

ஏழு நாட்கள் நடைபெறும் ஏற்காடு கோடை விழா, மலர்க்கண்காட்சி! 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48- வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும்  மே 23- ஆம் தேதி முதல் மே 29- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (மே 13) மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்குப்பின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கிணங்க, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுத்தோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டு 48- வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வரும் மே 23- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி வரும் மே 29- ஆம் தேதி வியாழக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் இக்கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

48-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி தொடக்க விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இக்கோடைவிழா நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள ஏற்காடு கோடை விழா சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 1.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறிக் கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக வன விலங்குகளைப் பாதுகாத்து வனத்தை பாதுகாப்போம் என்ற உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வன விலங்குகளின் வடிவமைப்புகள், மேட்டூர் அணை உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. 

மேலும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் 25,000-க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகளைக் கொண்டு மலர்க்காட்சி அமைக்கப்படவுள்ளன. அதேபோன்று, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன. 

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, கலைப்பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. 

மேலும், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடைவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இளைஞர்களுக்கான கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் கபாடி கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோன்று. ஏற்காடு கோடை விழாவையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோடை விழா நடைபெறும் நாள்களில் கன ரக வாகனங்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் ஏற்காட்டிற்குச் செல்லும்போது அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாகவும், கீழே இறங்கும் போது ஏற்காடு வாழவந்தி, கொட்டச்சேடு, குப்பனூர் சாலை வழியாக செல்லும் வகையில் ஒருவழிப் பாதையாக மாற்றும் வகையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.