ட்ரெண்டிங்

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம் தேதி மாற்றம்! 

சேலம் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம் வரும் மே 14- ஆம் தேதி அன்று ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாமானது வரும் மே 15- ஆம் தேதி அன்று நடைபெறுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாமானது ஒருநாள் முன்னதாகவே வரும் மே 14- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டுபயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இம்முகாமில், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல், செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது, பழுதுகளை கண்டறிதல், உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு குறித்த தெளிவுரை ஆகியவற்றினை வேளாண் இயந்திர உரிமையாளர்களுக்கும். விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் விளக்கம் அளிக்க உள்ளார்.

மேலும், பராமரிப்புப் பணிகள், சிறிய பழுது பணிகளை முகாமில் வேளாண் இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள் கையாண்டு இயக்கிட வழிவகை செய்யப்படும். இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.