ட்ரெண்டிங்

கடைகளில் அதிரடி சோதனை.... டன் கணக்கில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கர்நாடகா  மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக மற்ற மாவட்டங்களுக்கு கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சேலம் மாவட்ட காவல்துறையினர், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேபோல், சேலம் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்களும், மாவட்டத்தின் பல்வேறு மளிகைக்கடைகள், பீடா கடைகள், டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், 18 கடைகளில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.5 டன் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து  உணவுப்பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மொத்தம் 209 கடைகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 18 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 90,000 என்றும், புகையிலைப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.