ட்ரெண்டிங்

தனியார் பள்ளி பேருந்துகளில் ஆட்சியர் ஆய்வு!

தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (மே 10) சேலம் திருவாக்கவுண்டனூர் ஜவஹர் மில் திடலில் பார்வையிட்டார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இன்றைய தினம் ஆய்வின்போது 36 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 269 வாகனங்களில் 9 வாகனங்கள் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனம் இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து சேலம் மாவட்டத்தில் மொத்தம் 335 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 2,173 பள்ளி பேருந்துகள் வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாமில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்திட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டு கருவி, சி.சி.டி.வி கேமரா, அவசரகால வழி பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி., கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவிகிதம் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும். 

மேற்கண்ட அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். குறிப்பாக, மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று இரத்து செய்யப்படும். அதேபோன்று, வாகன ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை ஆட்சியர்  முன்னிலையில் நடைபெற்றது 

இந்நிகழ்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் (சேலம் மேற்கு) கோகிலா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, சேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.