ட்ரெண்டிங்

பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் மே 10- ஆம் தேதி அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்திற்கு வரும் மே 10- ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். 

இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைப்பேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதேபோன்று, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.