ட்ரெண்டிங்

மாவட்ட ஆட்சியர் பேச்சு! 

"இன்று வழங்கப்படும் கல்வியின் தரம் மாணவர்களின் நாளைய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துள்ளது"- 

சேலம், சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசிபாளையம், புனித மரியனை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம், தலைமையில் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 01) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று வழங்கப்படும் கல்வியின் தரம் மாணவர்களின் நாளைய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 
குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 74 தொடக்கப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதேபோல், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து பயண அட்டைகள் மற்றும் மிதிவண்டிகள் பாடநூல்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் என கற்றலுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும், தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. இதனால் உயிர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
சேலம் மாவட்டத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2022- 2023-ஆம் கல்வியாண்டில் 11- ஆம் வகுப்பு பயின்ற 8,852 மாணவர்களுக்கும், 13:127 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 21,979 மாணாக்கர்களுக்கு ரூபாய் 10.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. 
இதன் தொடக்கமாக, இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமலர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரிசிபாளையம் புனித மரியனை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் 11- ஆம் வகுப்பு பயின்ற 404 மாணவர்கள் மற்றும் 326 மாணவிகளுக்கென மொத்தம் 730 மாணாக்கர்களுக்கு ரூபாய் 35,31,360 மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.