ட்ரெண்டிங்

தி.மு.க. அரசு மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க.வின் புறநகர் மாவட்ட  அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, நான் சிறப்பாக செயல்படுவதால் தான் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் ரகுபதி இது போன்று ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ரகுபதி தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை நாட்டிற்கு அடையாளம் காட்டியது அ.தி.மு.க.தான். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சராக வாய்ப்பு வழங்கியது கழகம்.

எம்.ஜி.ஆர் எந்த கட்சியை தீய சக்தி என்று சொன்னாரோ, அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அடிமை குரல் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க. மக்களுக்கு சேவை செய்யும் கட்சி. மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையான கட்சி அ.தி.மு.க.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இன்று வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என்ன பத்திரிக்கையில் வெளி வருகிறது. ஆனால் ஸ்டாலின் தமிழகம் முதன்மை மாநிலம் என்கிறார். நாட்டில் என்ன பிரச்சினை நடைபெறுகிறது என்று தெரியாத முதலமைச்சராக அவர் உள்ளார்.

தமிழகத்தில் காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. வாகனம் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளனர். பின்னர் ஒரு காவலர் அந்த பெண்ணிடம் தவறாக பேசியுள்ளார். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. ஆனால் முதலமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது வீண்பழி சொல்கின்றனர் என்று கூறுகின்றனர். நான் ஏற்கனவே உள்துறை அமைச்சரை சந்தித்தபோது தமிழகத்திற்கு வேண்டிய நிதியை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதன்படி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் வளர்வதற்காக நாங்கள் எப்போதும் துணை நிற்போம். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். இப்போது ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை. மக்களை கவனிப்பதில்லை. முழுக்க முழுக்க தன் வீட்டு மக்களை பற்றி தான் சிந்திக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு இனியாவது விழித்துக் கொண்டு மாணவர்களுக்கான குறைபாடுகளை நீக்க வேண்டும்.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. இன்னும் ஒன்பது மாத காலம் உள்ளது மேலும் சில கட்சிகள் வரப்போகின்றன. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு காலிப் பணியிடங்கள் மூன்றரை லட்சம், அரசு சார்ந்த பணியிடங்கள் 2 லட்சம் என மொத்தம் ஐந்தரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் என்றனர்.

நான்கு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்கள் 78,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக மானிய கோரிக்கையில் தெரிவித்தனர். ஆனால் நான்கு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை 50,000- ஐ கடந்துள்ளது. தி.மு.க. குறிப்பிட்டது போல் முழுமையான காலிப் பணியிடங்கள் நிரப்பவில்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவுட்சோர்சிங் முறையில் ஆட்கள் நியமிக்கக் கூடாது. ஆனால் இப்போது அவர்கள் அவுட்சோர்சிங் முறையில் தான் நியமனம் செய்துள்ளனர். தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு. தேர்தல் முடிந்த பின்னர் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விட்டது என்பது நிரூபணம் ஆகிவிட்டது எனத் தெரிவித்தார்.