மேச்சேரி அருகே அதிகாலை நாயை கவ்விச் சென்று சிறுத்தை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. தகவலறிந்து ஆய்வுக்கு வந்த மாவட்ட வன அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள அரசமரத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு புதுக்காளிக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான நாயை சிறுத்தை கடித்தத்தில் கொடுங்காயம் ஏற்பட்டது.
டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமசாமி மலையில் சிறுத்தை இருப்பதையும், அது சென்று வந்த கால் தடங்களையும் ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் ஊருக்குள் நடமாடிய சிறுத்தை சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காததால் முத்து என்பவருக்கு சொந்தமான நாயை கவ்விச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மேட்டூர் தாசில்தார் ரமேஷ், சேலம் மாவட்ட வன அலுவலர் கசாப் ஷஷாங் ரவி மற்றும் வனத்துறை அதிகாரிகள், அரசமரத்தூர் கிராமத்திற்கு விரைந்தனர். சிறுத்தை நடமாடியதாக கூறப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சிறுத்தை முகாமிட்டுள்ள பகுதியாகக் கண்டறியப்பட்ட இடத்திற்கு புறப்பட்ட டேனிஷ்பேட்டை ரேஞ்சர் தங்கராசு மற்றும் வனத்துறையினரை விவசாயிகள் முற்றிகையிட்டனர். சிறுத்தையைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. விவசாய தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மாவட்ட வன அலுவலர் கூறுகையில், விவசாயிகள் அழைத்த போது வனத்துறையினர் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
தொடர்ந்து புதுகாளிக்கவுண்டனூர் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார்.



