சேலம் தி.மு.க. எம்.பி.யின் கோரிக்கையின் பேரில் முள்ளுவாடிக்கேட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு நடத்தினார்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேருந்துகள் உள்ளே வந்து பயணிகளை இறக்கிவிட்டு நின்றுச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 5- வது பிளாட்பார்ம் பின்புறம் உள்ள காலியிடத்தில் பேருந்துகள் நின்றுச் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் அறிக்கை கொடுத்தும் நடவடிக்கை இல்லை; அறிக்கை கொடுத்த அதிகாரிகள் தவறான அறிக்கை கொடுத்தார்களா? சுரங்கப்பாதை அமைக்க மறுக்கும் காரணம் என்ன? அதேபோல், ஈரோடு வரை வரும் ரயில்களை சேலம் வரை நீட்டிக்க வேண்டும்.
சேலத்தில் இருந்து கோவைக்கு காலை 05.50 மணிக்கு பிறகு 09.30 மணிக்கு தான் கோவை எக்ஸ்பிரஸ் செல்கிறது. இடைப்பட்ட 4 மணி நேரம் எந்த ரயிலும் இல்லை. இந்த நேரத்தில் பயணம் செய்வோர், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த நேரத்தில் சேலம்- கோவை இடையே மெமு ரயில் இயக்கினால் பொதுமக்கள் பயனடைவார்கள்" என்றார்.
இதனிடையே, கூட்டம் முடிந்ததும் முள்ளுவாடி கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரயில்வேத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


