பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் Sachet மற்றும் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்ததாவது, இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும். முன்னெச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் பெறவும் தமிழ்நாடு அரசு, Sachet மற்றும் TN-Alert App-ஐ உருவாக்கியுள்ளது. இதனை Play Store-ல் இருந்து பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வானிலை தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் துல்லியமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போதைய வானிலை தகவல், வானிலை முன்னறிவிப்பு, முன்னெச்சரிக்கை செய்திகளை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மழை, இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, மின்னல் எச்சரிக்கை, ஒவ்வொரு மணி நேரத்திற்குமான வானிலை அறிக்கை, அடுத்த 3 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு, பெறப்பட்ட மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் ஏற்படும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை மற்றும் பாதிக்கப்படக்கூடும் எனக் கருதப்படுகின்ற வசிப்பிடப் பகுதிகள் குறித்த விபரங்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்கான தகவல்கள் மேலும் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளன.
எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும், தமிழ்நாடு அரசின் Sachet மற்றும் TN Alert App ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


