சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காவல்துறையினரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சாட்சிகளை கலைத்தால் கைது செய்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறியும், அரசின் அனுமதி பெறாமலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அரசு நிதியை பயன்படுத்தியதுடன், இது சம்மந்தமாக புகார் அளித்தவர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. வழக்கை ரத்துச் செய்யக்கோரி துணைவேந்தர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனால் புலன் விசாரணையை விரைந்து முடித்து ஏன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என்று விளக்கம் அளித்தார்.வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், துணைவேந்தர் ஜெகநாதன் காவல்துறையினரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; சாட்சிகளை கலைத்தால் அவரை கைது செய்து விசாரணை நடத்தலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


