ட்ரெண்டிங்

தமிழ் வார விழா சேலத்தில் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை! 

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடும் விதமாக சேலம் மாவட்ட மைய நூலகத்தில் இன்று (ஏப்ரல் 29) மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் குறித்த கட்டுரைப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி துவக்கி வைத்தார். 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 29) முதல் மே 05- ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட தமிழ் வார விழா சேலம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரசு அலுவலர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் தமிழ் வார விழா கொண்டாடவும், அலுவலகத் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப் போட்டிகள், அறிவியல் மற்றும் கணினி தமிழ் குறித்த வினாடி வினா நிகழ்ச்சிகள், தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் முன் தயாரிப்பு அதுமின்றி உடனடியாக பேசும் பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றையதினம் மாவட்ட மைய நூலகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற கட்டுரைப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்தார். 

இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலர் விஜயகுமார், சேலம் தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் சுகன்யா, மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் விஜயன், முதல் நிலை நூலகர் சித்ரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.