ட்ரெண்டிங்

பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்! 


சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 26) வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (ஏப்ரல் 25) இரவு சுமார் 0.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாக மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராத விதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த திரு.செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். தமிழ்செல்வன் (வயது 11) மற்றும் செல்வன். கார்த்தி (வயது 11) ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) என்பவர் உட்பட 4 நபர்கள் உயிரிழந்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினருக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உடனடியாக தெரிவித்துள்ளதுடன், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 26) ஆறுதல் தெரிவித்து தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் இன்று அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விபத்து நடைபெற்ற சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.