77-வது சுதந்திர தின விழா, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) காலை 09.00 மணிக்கு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட சேலம் ரயில்வே கோட்டத்தின் மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் சாகச நிகழ்ச்சியும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் நாய் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பேசிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, "நடப்பாண்டு வருவாய் ஜூலை மாதம் வரை ரூபாய் 395 கோடியாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டை காட்டிலும் 26% அதிகமாகும். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 15 ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரூபாய் 272 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 68 போலி முகவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூபாய் 26.51 லட்சம் மதிப்புள்ள ரயில் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ரயில்வே பணியாளர்கள் என 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)