ட்ரெண்டிங்

பொருளாதார நிலைய மேம்படுத்த தி.மு.க. அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை"- அண்ணாமலை விமர்சனம்!

 

சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று (ஜன.05) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அண்ணாமலை கூறியதாவது, "பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1,000 வழங்குவதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதிநிலையைக் காரணமாகக் காட்டியுள்ளது. இதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ரூபாய் 5,000 கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்போது ரூபாய் 1,000 கொடுக்கிறார்.

 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 31 மாதங்களில் மட்டும் தி.மு.க. அரசு 2.69 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் தொகை 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 40 சதவீத தொகை தி.மு.க. ஆட்சியில் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார நிலைய மேம்படுத்த தி.மு.க. அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை.

 

பொருளாதாரத்தை சரி செய்யாமல் வெறுமனே பஞ்சப்பாட்டு பாடுவதே தி.மு.க.வினரின் செயலாக உள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் தி.மு.க. எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதே வேகத்தில் சென்றால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன்தொகை அடுத்த 2 வருடங்களில் 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிடும்.

இந்திய அளவில் மிகக் குறைவான அந்நிய முதலீடு தமிழகத்திற்குத் தான வந்துள்ளது.

 

முதலமைச்சர் துபாய்க்கு சென்று வந்த பிறகு 6,000 கோடி ரூபாய் முதலீடே இன்னும் வரவில்லை. இதில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 5 லட்சம் கோடி ருபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்கத் தயார். இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும், இது தொடர்பாக வம்பிழுக்கு தயாராக உள்ளது. அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய கவனத்திற்கு வரும் அனைத்து முறைகேடுகளையும் மக்கள் முன்பு வைப்பதே என் வேலை. ஏற்கனவே, கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின்போது, அது தீவிரவாத செயல் என்பதற்கான ஆவணத்தை நான் வெளியிட்டேன். தவறை வெளிப்படுத்துவதற்காக தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்கத் தயாராக உள்ளேன்

 

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மத்தியக் குழுக் கூடி முடிவெடுத்து அறிவிப்பார்கள். என்னைப் பொறுத்த வரை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று யார் வந்தாலும், இருகரம் கூப்பி நான் வரவேற்பேன். சேலம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது." இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.