சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஏப்ரல் 25) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இத்தகைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியைப் பொறுத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களிலும் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், யூரியா 4,516 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,677 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3,132 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 7,634 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 16,959 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 5,800 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 22.138 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 104.010 மெட்ரிக் டன் விதை பயறு வகைகளும் 71.583 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைகள் மூலம் கடந்த மார்ச் மாதம் மட்டும் 8,631.9 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 980 விவசாயிகள் மற்றும் 67,031 நுகர்வோர் பயனடைந்துள்ளனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வாரியாக வரத்து, வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பொருளீட்டுக்கடன் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், குறுகிய கால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்த மாதாந்திர முன்னேற்றங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைவாக அடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடைகாலம் என்பதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக இலாபம் பெறுவதற்கு சொட்டுநீர் பாசனம் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். சொட்டுநீர் பாசனத் திட்டத்தில் பயிருக்குத் தேவையான நீர், உரம் போன்றவை பயிரின் வேருக்கு அருகிலேயே கிடைப்பதால் பயிரின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் மகசூலும் அதிக அளவு கிடைக்கிறது.
மேலும், விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாயப் பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)