வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஏப்ரல் 24) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கான வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும், வன உரிமைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் வன உரிமைகளை வழங்குவதற்காக வகுக்கப்பட்ட அதிகாரங்கள், தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து வருவாய்த்துறை, வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஒருநாள் பயிலரங்கம் இன்றையதினம் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பழங்குடி கிராம சபையைக் கூட்டி வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாகவும், வன நிலத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் மூன்று தலைமுறைகளாக அல்லது 75 ஆண்டுகளாக வன நிலத்தில் வசித்து வரும் பிற இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனிநபர் வன உரிமைப்பட்டா வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இப்பயிலரங்கில் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, சேலம் மாவட்டத்தில் 956 தனிநபர் வன உரிமைப் பட்டாக்களும், 70 கிராம வனக் குழுக்களுக்கு சமுதாய வன உரிமைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.
வன உரிமைச் சட்டமானது 13/12/2005-க்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். அதேபோன்று. ஒவ்வொரு கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோரையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபைகளை உருவாக்கிடவும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பழங்குடியினர் மக்கள் அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவர்களோ வனப் பகுதிகளில் வசித்து வந்ததற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், கிராம சபையில் ஒப்புதல் பெற்று விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலகங்களுக்கு வரப்பெறும் பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தங்களது நிலையில் ஆய்வு செய்தும். தகுதியான விண்ணப்பங்களை மேல்நடவடிக்கைகாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்ட அளவிலான குழுவிற்கு அனுப்பிடவும், கிராம எல்லைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பாரம்பரியமாக சேகரிக்கப்படும் பொருட்களை உபயோகிப்பதற்கும், பிறருக்கு கொடுப்பதற்குமான உரிமையினை சமுதாய வன உரிமைப்பட்டா மூலம் பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, பிரியதர்ஷினி உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், வன உரிமைச்சட்ட ஒருங்கிணைப்பாளர் பகவநிதி, வன உரிமைச் சட்ட அறிவுசார் ஆலோசகர் கிரிராவ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாவட்ட வன உரிமைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


