சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி, இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 05) ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்ரல் 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 1,766 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 82 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 48 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 89 பதற்றமான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 146 பதற்றமான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்கர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 173 மையத்தினையும், செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 150 மையத்தினையும். ஜெயராகிணி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 142, 143 மையங்கள் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தையும் மாவட்டத் தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இவ்வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள், தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் தொடர்புடைய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விரிவாக ஆய்வு செய்ததுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் மின்சார வசதி, சாய்வு தளம் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வருவாய் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


