ட்ரெண்டிங்

நிறைந்தது மனம் நிகழ்வில் ஆட்சியர் நேரில் ஆய்வு! 

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், இராமசேஷபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (ஏப்.22) நிறைந்தது மனம் நிகழ்வில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வதை உறுதிச் செய்திட அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் சென்றுச் சேர்வதை சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். 

அந்த வகையில், சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், மணிவிழுந்தான் வடக்கு கிராமம், இராமசேஷபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28- ஆம் தேதி மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு அரசுத்துறை உயர் அலுவலர்களால் இக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மகளிர் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28- ஆம் தேதி மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் இராமசேஷபுரம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 11.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 155 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 11.50 லட்சம் மதிப்பிலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூபாய் 1.09 கோடி மதிப்பீட்டிலான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், 28 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 91.75 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும், வருவாய்த்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூபாய் 16.73 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களும், 11 பயனாளிகளுக்கு இந்து மலையாளி சாதிச் சான்றிதழ்களும் என 132 பயனாளிகளுக்கு ரூபாய் 2.43 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று, இராமசேஷபுரம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தாட்கோ வேளாண்மைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 314 பயனாளிகளுக்கு ரூபாய் 404 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு கடனுதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேர்ந்துள்ளது குறித்தும், மேலும் இக்கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் இன்றையதினம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக, இக்கள ஆய்வின்போது மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்கள் வாயிலாக பயனடைந்தவர்களை நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்பாடுகள் மற்றும் மேற்கொண்டு அரசிடமிருந்து தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் அறிந்து அத்திட்டங்களை முழுமையான முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மேம்பாடு அடைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.