ட்ரெண்டிங்

பழங்குடியினர், மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம்!

சேலம் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மீனவ மக்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் செயல்படுத்தப்படும் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டம் 2024-25-ஆம் ஆண்டு முதல் 2028-29-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மீனவ சமுதாய மக்கள். பழங்குடியினர் வகுப்பை சார்ந்த (ST) மீன்பிடிப்பு, மீன்வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மீன் பண்ணை குட்டைகள் வெட்டுதல், புதிய மீன்வளர்ப்பு குளம் அமைத்தல் மீன்குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைத்தல், MNRGES/NRLM திட்டத்தின் மூலம் வெட்டப்பட்ட மீன்பண்ணை குட்டைகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல், மிதவை கூண்டுகளில் மீன்வளர்த்தல் போன்ற திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 

அதேபோன்று, அலங்கார மீன்வளர்த்தல், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல், நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி மீன்வளர்த்தல், ஏரிகளில் கூண்டுகள் அமைத்து மீன்வளர்த்தல், குளிர்சேமிப்பு ஆலை, பனிக்கட்டி ஆலை அமைத்தல், குளிரூட்டப்பட்ட வாகனங்கள், காப்பிடப்பட்ட வாகனங்கள், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய மோட்டார் சைக்கிள், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய சைக்கிள், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய 3 சக்கர வாகனம், நேரடி மீன் விற்பனை மையங்கள், சிறிய 
மீன் தீவன ஆலை அமைத்தல், நவீன முறையில் மீன்விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்கள் பாலமலை, கத்திரிப்பட்டி, ஜெருகுமலை, ஜல்லுத்துப்பட்டி. கோனமடுவு நுல்லீத்துக்கோம்பை, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி, கொலகூர், கரடியும். முழுவி செம்மநாதன், கோவிலூர். ஆனக்காடு, நல்லூர், மேலூர், வெள்ளக்கடை, கொண்டையனூர், வெள்ளுர், பட்டிப்பாடி, புலியுர் புளியன்கடை, புத்தூர், வாளவந்தி, மாரமங்கலம், பீலக்காடு, கீளையுர், செந்திட்டு, அரங்கம், வேப்படி ஆகியவை ஆகும். 

எனவே மலைவாழ் மீனவ சமுதாய மக்கள், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பங்கள் பெறுவதற்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மேட்டுர் அணை அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 96773-50979, 89400-00482 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.