சேலம், கோவை பகுதியில் ரயில்களில் குற்றத்தடுப்பு பணியைத் தீவிரமாக போலீசார் மேற்கொள்ள வேண்டும். கோடைக்கால சீசன் வடமாநில கொள்ளையர்களைப் பிடிக்க ரோந்து செல்ல வேண்டும் என சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி. ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ரயில்களில் குற்றத்தடுப்பு பணியைத் தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து அந்தந்த பகுதி உட்கோட்டங்களில் குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டங்களை நடத்த ரயில்வே காவல்துறை டி.ஜி.பி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், சேலம், கோவை ரயில்வே உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம், சேலம் ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 17) நடந்தது.
சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சேலம் உட்கோட்ட டி.எஸ்.பி. பெரியசாமி, இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார் (சேலம்), ருவந்திகா (போத்தனூர்), மீனாட்சி (கோவை), பிரியா சாய் (ஈரோடு), சித்ரா (காட்பாடி) மற்றும் எஸ்.ஐ.க்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ரயில்களில் குற்றத்தடுப்பு பணி மேற்கொள்வது குறித்து காவல்துறை எஸ்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதில் கோடைக்காலம் நெருங்கியுள்ளதால் சீசன் திருடர்களின் நடமாட்டம் ரயில்களில் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோலவே வடமாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் வந்து ரயில்களில் நகைப்பறிக்கும் செயல்களில் ஈடுபடலாம். அதனால் சேலம், கோவை உட்கோட்ட பகுதியில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் ரயில்வே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அதிகாலை மற்றும் நள்ளிரவு வேளையில் முன்பதிவு பெட்டிகளில் ரோந்து சுற்றி வந்து சந்தேக நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் சிக்னலுக்காக ரயில்கள் நிற்குமோ, அங்கெல்லாம் கண்காணிப்பை அதிகப்படுத்திட வேண்டும். ஏசி மற்றும் இதர முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் உடமைகள், செல்போன்களைத் திருடும் சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, பழைய திருட்டு வழக்கு குற்றவாளிகள், சந்தேக நபர்கள் இறங்குகிறார்களா? என கண்காணித்து பிடிக்க வேண்டும் பெண் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிச் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.



-SXgDfGgJfO.jpg)