ட்ரெண்டிங்

பெண்கள் துணிச்சலோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும்!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஏப்.16) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இன்றைய தினம் மனநல மேம்பாடு குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியாவின் ஏற்பாட்டில் ஓமலூர் வட்டம், சிக்கம்பட்டியில் நடத்தப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்ட அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது சுய தொழில் மேம்பாடு மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு குறித்தும் தொடர்ச்சியான சிந்தனைகளுடன் செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று, அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். 

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அன்றாடம் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ஏற்படும் எதிர் சிந்தனைகளைப் போக்கி அவர்களுக்கான மன நல ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மன அழுத்தம் காரணமாக நாம் எடுக்கும் முடிவுகளில் தடுமாற்றம். பசியின்மை, தூக்கமின்மை தவறான முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஏற்படுகின்றனர். 

அதேபோன்று, மகளிர் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும். குடும்ப பிரச்சனையாக இருந்தாலும், தொழில் தொடங்கி ஈடுபடுகின்ற நிலையில் ஏற்படுகின்ற பிரச்சனையாக இருந்தாலும் அதனை துணிச்சலோடும், தைரியத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அச்ச உணர்வோ, பய உணர்வோ இல்லாமல் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீ முரளி, மாவட்ட மனநல மருத்துவ திட்ட அலுவலர் டாக்டர்.விவேகானந்தன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.