ட்ரெண்டிங்

சேலம் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு! 

சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, வேளாண் உற்பத்தியினை பெருக்கி. விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2024-25-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்த விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் வரும் ஜூன் 12- ஆம் தேதி முடிய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட சேலம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேலம் மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக பச்சைப்பயறு 20 மெ.டன் கொள்முதல் செய்யவும், சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலமாக உளுந்து 250 மெ.டன் கொள்முதல் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பச்சைப்பயறு மற்றும் உளுந்து விளைப்பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12%- க்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டுவர விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூபாய் 86.82 வீதத்திலும், உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூபாய் 74 வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றிற்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 

விலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினையும் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் அணுகி பதிவு செய்து தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையலாம். 

பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல இலாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை விவசாய பெருமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.