ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக் கழகத்தில் பிடெக்- இந்திய மாணவர் சங்கம் கண்டனம்! 


சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தனியாருடன் இணைந்து பிடெக் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியைக் காவி மயமாக்கி வியாபாரம் செய்யத் துடிக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரைப் பணிநீக்கம் செய்ய பல்கலைக்கழக வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறோம். கோடை விடுமுறையை மே மாதத்தில் இருந்து அறிவிக்க வேண்டும்; தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்திலேயே முடிக்க வேண்டும். 

கல்வியாண்டு ஜூலை முதல் ஏப்ரல் வரை என்று இருப்பதை அமல்படுத்த வேண்டும். மே 19-ல் பணி முடியும் துணைவேந்தரை மாணவர்கள், ஆசிரியர்கள் வழி அனுப்ப கல்வியாண்டை நீட்டித்து மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கும் துணை வேந்தர் மற்றும் தேர்வாணையருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் பல்கலைக்கழகம் தனியாருடன் இணைந்து பிடெக் இமெர்சிவ் டெக்னாலஜி, பிஎஸ்சி இம்மெர்சிவ் டெக்னாலஜி துவங்குவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; தனியாருடன் இணைந்து கல்வியை வியாபாரமாக்குவதற்கு உடந்தையாக இருந்த அரசு வழி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.