சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு உப்போடை பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பழனிவேல் (வயது 53). இவரது மனைவி வசந்தி. இவர் கடந்த 26 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் பழனிவேல் இரவு நேரங்களில் குடியிருக்கும் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்தில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்ற பழனிவேல் மறுநாள் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்குள் சென்றுப் பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 45 சவரன் தங்கநகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 3.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதனையடுத்து விவசாயி ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லில்லி வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருப்பவரகளை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி கொள்ளையடித்து வரும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


