ட்ரெண்டிங்

ரூ.2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்! 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்ராயன் மலை மேல்நாடு கிராமத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஏப்ரல் 09) நடைபெற்றது. 

இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி கிராமங்களில் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் மாதந்தோறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் மக்கள் சந்திப்பு திட்டம் நடைபெறும் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மேல்நாடு கிராமத்தில் அம்பலத்திட்டு, வேலம்பட்டு, கரியகோவில் வளவு, பனம்பட்டி, மேல்மாயமலச்சி, ஒடுவன்காடு, புளியம்பட்டி, செம்பரக்கை ஆகிய குக்கிராமங்களுக்குட்பட்ட 509 குடும்பங்களை உள்ளடக்கிய 2,438 மக்கள் தொகை கொண்டதாகும். 

தமிழ்நாடு முதலமைச்சரால் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி கற்றல் மூலம் சமூக வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் தனிமனித பொருளாதார வளர்ச்சியும் அடைய முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து தங்களது குழந்தைகளை குறைந்தபட்சம் உயர்க்கல்வி வரை முழுமையாக படிக்க வைப்பதை உறுதி செய்திட வேண்டும். 18 வயதிற்குட்பட்ட பெண்ணிற்கு திருமணம் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கையாக ஈடுபடுவோர் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலத்திற்கான பட்டா வேண்டி பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இப்பகுதி மலைப்பகுதியாக அமைந்துள்ளதால் பட்டா வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், வன உரிமை சான்று பட்டா மாற்றி அமைக்கப்பட்டு வட்டாட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கான குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, கிராம வனக்குழு மற்றும் மாவட்ட வனக்குழுவும் பரிந்துரைக்கும் போது பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மேலும், கரியகோயில் வளவு, அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் உயர்நிலைப்பள்ளி கடந்த மாதம் தமிழ்நாடு அரசால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுடைய ஆதார் எண்ணுடன் சர்வே எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கான திட்டங்கள் அவர்களுக்கு சென்றுசேர்வதை நாம் உறுதி செய்ய முடியும். இல்லம் தேடி கல்வி பணியாளர்களுடன் இணைந்து இப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் உட்பிரிவு பட்டா மாறுதல், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, நத்தம் பட்டா மாறுதல், தோராயப்பட்டா, சான்றிதழ்கள், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூபாய் 2.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கென மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை மலைவாழ் மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளச்சித்துறை, ஆவின், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பாரதி, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநர் மஞ்சுளா, உதவி இயக்குநர் (நில அளவை) ராஜசேகர், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் குமரன், ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார் மற்றும் சிவராமன், அன்பு, வெங்கடேசன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.