மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 10- ஆம் தேதி அன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் அரசு உத்தரவின்படி, இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என்பதால், மேற்கண்ட தேதியன்று தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவினைச் செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அரசு உத்தரவினை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



