ட்ரெண்டிங்

நீட் தேர்வு மாணவி தற்கொலை!

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், பெரிய முத்தியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (43). தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி சந்திரா. இவர்களது மகள் சத்யா (18), மகன் துளசிநாத்.

கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த சத்யா, நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. நடப்பாண்டில் வெற்றி பெற 10 மாதங்களாக ஜலகண்டாபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 31- ஆம் தேதி வீட்டில் இருந்த சத்யா, எறும்பு பவுடரைக் குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று (ஏப்ரல் 03) காலை உயிரிழந்தார். 

இதையடுத்து கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதில் மகள் சத்யா நீட் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் படிக்க முடியவில்லை எனக் கூறி வந்தார். இதனால் வேறு படிப்பில் சேர்ந்துக் கொள்ளலாம் என ஆறுதல் கூறி வந்தேன். இருப்பினும் எறும்பு மருந்தை குடித்துவிட்டார் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.