ட்ரெண்டிங்

நங்கவள்ளி, வனவாசியில் ஆட்சியர் ஆய்வு! 

 

சேலம் மாவட்டம், நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. இன்று (ஏப்ரல் 02) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்விற்கு பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும் உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பேரூராட்சிகள் துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம். நகர்ப்புர சாலைகள் மேம்பாட்டு திட்டம். மூலதன மான்ய திட்டம். நிதிக்குழு மானியம். பொது நிதி திட்டம். தூய்மை பாரத இயக்கம், அம்ரூத் 2.0, பள்ளிகள் மேம்பாட்டு மானிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நங்கவள்ளி பேரூராட்சியில் ரூபாய் 9.02 கோடி மதிப்பீட்டிலான பணிகளும், வனவாசி பேரூராட்சியில் ரூபாய் 4.41 கோடி மதிப்பீட்டிலான பணிகளும் என மொத்தம் ரூபாய் 13.43 கோடி மதிப்பீட்டிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், இன்றையதினம் நங்கவள்ளி பேரூராட்சியில் நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், ரூபாய் 39.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து வனவாசி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வார்டு எண் 7-ல் ரூபாய் 147 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளதையும், தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் வார்டு எண்-9 பெரியவனவாசியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வின்போது, பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் குருராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.