கோடைகாலத்தையொட்டி, சுற்றுலாத் தளமான ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது, காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த விவசாய மிச்சங்களை எரிக்க கூடாது எனவும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ளவர்களிடம் வன தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வனப்பகுதிகளில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திடவும், கோடைகாலம் முடியும் வரை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்காடு, கருமந்துறை ஆகிய 2 மலைப்பகுதிகளிலும் தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்கள் உள்ளது. இத்தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்களான ஏற்காடு-73050 95785 மற்றும் கருமந்துறை 04292-244803 மற்றும் 75503-96101 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் எளிதாக அழைக்கும் வகையில் பொது இடங்களில் காட்சிப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காட்டுத் தீ தொடர்பான தகவல்களை உடனடியாக 0427-2415097 மற்றும் 1800-599-0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வன விலங்குகள் கோடைகாலத்தில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் தேடி வருவதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் அரசால் தெரிவிக்கப்படும் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுற்றுலாப் பயணிகள், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூப் மக்கள் பின்பற்றி வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மயில், உதவி வனப் பாதுகாவலர் (பயிற்சி) கீர்த்தனா, துணை ஆட்சியர் (பயிற்சி) மாருதி பிரியா உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


