தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மார்ச் 25- ஆம் தேதி அன்று காணொலிக் காட்சியின் வாயிலாக சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரூபாய் 13.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அச்சுக்குழுமம் மற்றும் அரியாக்கவுண்டம்பட்டியில் ரூபாய் 25.34 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி முன்னிலையில் இன்று (மார்ச் 31) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மார்ச் 25- ஆம் தேதி அன்று காணொளிக் காட்சியின் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் அரியாக்கவுண்டம்பட்டியில் ரூபாய் 25.31 கோடி மதிப்பீட்டில் 99,346 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வெள்ளி கொலுசு உற்பத்தி மையத்தினைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து. இம்மையத்தின் பயன்பாடுகள் குறித்து இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும். இம்மையமானது வெள்ளி கொலுசு உற்பத்தியில் முன்னணியாக விளங்கும் சேலம் மாவட்டத்தின் கொலுசு உற்பத்தியாளர்களுக்கென 1,209 ஏக்கர் பரப்பளவில் 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதன்மூலம் 2000 நபர்கள் நேரடியாகவும், 4,000 நபர்கள் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். மேலும், சேலம் (தெற்கு) வட்டம். சீலநாயக்கன்பட்டியில் ரூபாய் 1,346 கோடி மதிப்பீட்டில் 1,029 ஏக்கர் பரப்பளவில் 37 பொது வசதி மையங்களுடன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அச்சு தொழில் குழுமம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்றையதினம் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, இதுபோன்ற அச்சுக்குழுமமானது தமிழ்நாட்டில் சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூருக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. இதன்மூலம் 1,000- க்கும் மேற்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சகத் தொழில் மேற்கொள்பவர்கள் மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த அச்சுத்தொழில் மேற்கொள்பவர்களும் பயனடைகின்றனர்.
அதேபோன்று, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், உமையாள்புரம் கிராமத்தில் 20.07 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்தொழிற்பேட்டையில் முதல் கட்டமாக 15.76 ஏக்கரில் ரூபாய் 1.60 கோடி செலவில் 43 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 500 நபர்கள் நேரடியாகவும், 1,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு சேலம் மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், அச்சுக்குழும மேலாண்மை இயக்குநர் சாந்தி, சிட்கோ கிளை மேலாளர் சத்தியமூர்த்தி, சேலம் மாவட்ட குறு, சிறு தொழிற்சங்கத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.


-SXgDfGgJfO.jpg)