ட்ரெண்டிங்

மாணவ,மாணவிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்-சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவு

 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தலைமையில் இன்று (நவ.04) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, வகுப்பறைகளின் சுவர்களுக்கு அப்பால் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கைக் கல்வி அதிக அளவில் நிறைந்துள்ளது. இவ்வாழ்க்கைக் கல்வியை உரிய நேரத்தில் உங்களுக்கு வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, இன்றைய நவீன உலகில் பல்வேறு மின்னணு சாதனங்கள் நமக்கு பேருதவியாக அமைந்துள்ளன.

 

அதேநேரத்தில் மாணவ, மாணவிகள் இவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், பல்வேறு கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. எனவே. மாணவ, மாணவிகள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தவிர்த்து கவனச் சிதறல்களின்றி கல்வி கற்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 

மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்ட அரங்கில் மாணவ, மாணவிகளாகிய உங்களை அழைத்து வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் எதிர்காலத்தில் நீங்களும் இதுபோன்று உயர் பொறுப்பிற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நல்வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதாலும், கல்வி ஒன்றின் மூலம் மட்டுமே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை அறிந்து கொள்ளவே இந்நிகழ்ச்சி இங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இவ்வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு துறை வல்லுநர்கள், உயர்கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளுக்கு எவ்வாறு தயார்ஆவது மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். இந்த நல்ல வாய்ப்பினை இதில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் சிறந்து மினாங்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் மணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சமூக சேவகர் மற்றும் எழுத்தாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.