ட்ரெண்டிங்

சூரத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற சேலைகள்- இளம்பிள்ளை தொழிலாளர்கள் அதிருப்தி!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளையில் உற்பத்தியாகும் சேலைகளுக்கென்று தனித்துவம் உள்ளது.. இதனால் தரமான சேலைக்கு பெயர் போன ஊர் என்ற பெருமையை இளம்பிள்ளை பெற்றிருக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் உற்பத்திச் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலையின் தரத்தின் முக்கியத்துவம் கருதி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இளம்பிள்ளைக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

 

இளம்பிள்ளையில் சேலை உற்பத்தித் தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில், இளம்பிள்ளையில் உள்ள சில வியாபாரிகள் சூரத்திலிருந்து தரமற்ற 2, 3 முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய சேலைகளை இறக்குமதி செய்து ரூபாய் 300, ரூபாய் 400 என்று விற்பனை செய்து வருகின்றனர்.

 

இதற்கு இளம்பிள்ளை பகுதியில் சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், வெளிமாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தரமற்ற சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை வாங்க பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.