சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக 2024-25-ஆம் நிதியாண்டிற்கு அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 10 லட்சம் காசோலையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி,மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்கள்.
பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், அனைத்து சமூகத்தினரும், சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழ்ந்திடும் வகையிலும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடைகள், பொதுக்கோவில்கள், குடிநீர் கிணறுகள், உணவகங்கள், சலூன் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவித்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழும் ஊராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 10 லட்சம் அரசால் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டிற்கு சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியைக் கொண்டு குடிநீர் வசதி மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக்கட்டடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டுவதற்கும், புதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

-hH7ukvnqSe.jpg )
-SXgDfGgJfO.jpg)