ட்ரெண்டிங்

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்!

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 24) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காசநோய் தின விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, ஆண்டுதோறும் மார்ச் 24- ஆம் தேதி உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் உலக காசநோய் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள் கொடையாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் காசநோய் இல்லாத 72 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

இதேபோன்று, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காசநோய் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே காசநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனே சளி பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய்க்கான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் துறையில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளின் விவரத்தினை NIKSHAY இணையத்தில் பதிவு செய்யவேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

காசநோயாளிகள் அவர்களது பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையிலும், அவர்கள் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்ள உதவும் வகையிலும் அனைத்து காசநோயாளிகளுக்கும் மாதம் ரூபாய் 1,000 வீதம் சிகிச்சை முடியும் வரை NIKSHAY POSHAN YOJANA திட்டத்தின் மூலம் நேரடியாக நோயாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் 1,39,050 நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு 4,383 நபர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்புள்ள காசநோயாளிகளை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை ஆத்தூர் மேட்டுர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஆகிய இடங்களில் சிறப்பு படுக்கை வசதிகள் செயல்பட்டு வருகிறது. 
தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் காசநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி ஒன்றிணைந்து காசநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இந்நிகழ்வில் காசநோய் இல்லா சேலம் மாவட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காசநோய் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினைத் தொடங்கி வைத்து, காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.  

இந்நிகழ்வில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தேவிமீனாள், ஆத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யோகானந்த், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜ்குமார், துணை இயக்குநர்கள் மரு.கணபதி, மரு.ராதிகா, மரு.சுகன்யா மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.