சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்டப் பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 452 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 17 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 91,100 மதிப்பிலான செயற்கைகால்களும், 3 நபர்களுக்கு ரூபாய் 12,900 மதிப்பிலான காதொலிக் கருவிகள் மற்றும் ஒரு நபருக்கு ரூபாய் 850 மதிப்பிலான ஊன்றுகோல் என மொத்தம் ரூபாய் 1.05 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) நடராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)