இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகியுள்ள 2 பேரின் வங்கிக் கணக்குகள் நேற்று (ஜன.27) முடக்கப்பட்டன.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் வேலூரைச் சேர்ந்த விஜயாபானு (வயது 48) என்பவர் நடத்தி வந்தார். அறக்கட்டளையில் பணம் இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக் கணக்கில் பணம் வசூலித்து வந்தனர்.
இதையறிந்த பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் திருமண மண்டபத்தில் சோதனையிட்டு அங்கீகாரம் இல்லாத திட்டத்தின் கீழ் முறைகேடு செய்து முதலீடாகப் பெறப்பட்ட 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். முறைகேட்டில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயாபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்து கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் விஜயாபானுவின் உதவியாளரான வேலூரைச் சேர்ந்த சையத் மஹ்மூத்தை கைது செய்து அவர், ஓட்டிய டெம்போ டிராவலர்ஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினர். அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் இது குறித்த கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நேற்று (ஜன.27) விஜயாபானு, ஜெயபிரதா ஆகியோரின் ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இந்த வழக்கில், இதுவரை அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் 77 பேரும், பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்ததுறையில் 50 பேரும் ரூபாய் 5 கோடி வரை மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர்.
அதேபோல், மோசடியில் ஏஜெண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அறக்கட்டளையில் பணிபுரிந்தவர்கள் என 15- க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


