ட்ரெண்டிங்

394 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 14.47 கோடி கல்விக்கடன்"- சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்!

 

சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் கல்விக்கடன் மேளா மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (பிப்.15) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் மேளா நடத்தப்படுகிறது. இன்றைய தினம் நடத்தப்படும் இக்கல்விக்கடன் வழங்கும் முகாமில் ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி வித்யாலஷ்மி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்களின் விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், மேலும் புதிதாக கல்விக்கடன் பெற விரும்புபவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 2023 வரை 2,200 மாணவ, மாணவிகளுக்கு ரூ.70 கோடி மதிப்பில் கல்விக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெறும் கல்விக்கடன் வழங்கும் முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து, தற்போது வரை 394 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 14.47 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இன்று மாலைக்குள் மேலும் 200 மாணவ, மாணவிகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்படவுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினர் உயர் கல்வியை பெறுவதன் மூலம் அக்குடும்பம் மட்டுமல்லாமல், அந்த சமூகமும் வளர்ச்சிய வாய்ப்பாக அமைகிறது என்பதால், கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கல்விக் கடனை எளிதாகப் பெற்று வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து இதுபோன்ற கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்படுகிறது. கல்விக் கடன் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இதனைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ராஜ்குமார். பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சரவணன், யூனியன் வங்கியின் துணை பொது மேலாளர் பிரின்ஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.