சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சாலை விபத்துகளை முற்றிலும் குறைத்து விபத்தில்லாப் பயணத்தை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் காவல்துறை, போக்குவரத்துத்துறை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது.
குறிப்பாக மனித உயிர்களின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிதல். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிதல், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தொடர் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் கடந்த பிப்ரவரி 2025 மாதத்தில் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், கைப்பேசி உபயோகித்துக்கொண்டு வாகனம் இயக்குதல், அதிக ஆட்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல், அதிக பாரங்களை வண்டியில் ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 197 நபர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்துத் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவிலான பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)