ட்ரெண்டிங்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம்! 

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துதல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (மார்ச் 21) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

பின்னர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, 
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துதல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் இன்றையதினம் நடத்தப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950, 
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்துதல் விதிகள் 1961, மாண்பமை உச்சநீதிமன்ற தீர்ப்புகள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்கள், கையேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான பரவலாக்கப்பட்ட வலுவான மற்றும் வெளிப்படையான சட்ட கட்டமைப்பை நிறுவுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

அதேபோன்று, அடுக்குமாடி கட்டிட பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதிகளில் புதிதாக வாக்குச் சாவடி அமைத்தல் மற்றும் தீர்வு செய்யப்பட வேண்டிய இனங்கள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

குறிப்பாக, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) நடராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் லோகநாயகி, பிரியதர்ஷினி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.